இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்: இதுவரை நடந்தது என்ன?
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவ படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையேயான கட்டுப்பாட்டு எல்லை கோட்டை கடந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளின் முகாம்களின் மீது வான் தாக்குதல்களை நடத்தியதால் பதற்றம் அதிகரித்தது.
இருநாடுகளுக்கிடையான பதற்ற நிலையின், கால வரிசையை காண்போம்.
-
17 பிப்ரவரி 2019
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, இந்தியாவுக்குக்கான தனது தூதரை அழைத்து பாகிஸ்தான் பேசியது.
-
18 பிப்ரவரி 2019
இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு இந்திய ராணுவ வீரர்கள், ஒரு காவல்துறை அதிகாரி உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
-
19 பிப்ரவரி 2019
"எவ்வித ஆதாரமுமின்றி பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கூறினார். மேலும், "நீங்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏதாவது நடத்தினால், அதை தடுப்பது பற்றி யோசிப்பது மட்டுமின்றி, பாகிஸ்தான் தக்க பதிலடியும் கொடுக்கும்" என்று அவர் கூறினார்.
-
22 பிப்ரவரி 2019
காஷ்மீர் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, காஷ்மீரிகளை, அதுவும் குறிப்பாக மாணவர்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
24 பிப்ரவரி 2019
இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
-
26 பிப்ரவரி 2019
"ராணுவரீதியில் அல்லாத தாக்குதல்" என்று கூறி இருநாடுகளுக்கிடையேயான கட்டுப்பாட்டு எல்லை கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்களை கொண்டு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய விமானப்படை அறிவித்தது. இந்த தாக்குதலினால் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
-
27 பிப்ரவரி 2019
மிக் 21 ரக விமானத்தில் பாகிஸ்தானை நோக்கி சென்ற விமானி ஒருவர் 'தாக்குதலின்போது காணாமல் போனதாக' பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்தார். மேலும், எதிர்தாக்குதலின்போது பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
28 பிப்ரவரி 2019
தங்களிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரரை 'அமைதி நோக்கத்துடன்' விடுவிக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
தயாரிப்பு உதவி
தயாரிப்பு: மஹிமா சிங்
செய்தி: ஒலாவால் மாலோமோ, துருவ் நெந்வானி
பட உதவி: கெட்டி இமேஜஸ்